மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் தற்போது அயர்லாந்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், இத்தொடரில் நேற்று இரண்;டாவது போட்டியாக நடைபெற்ற போட்டியொன்றில், மேற்கிந்திய தீவுகள் அணியும், பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
டப்ளின் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, சாய் ஹோப்பின் சதத்தின் துணையுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக சாய் ஹோப் 109 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் மஷ்ரபீ மோர்டாசா 3 விக்கெட்டுகளையும், முஷ்டபிசுர் ரஹ்மான் மற்றும் மொஹமட் சய்ப்புதீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைதொடர்ந்து, 262 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 45 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது பங்களாதேஷ் அணி சார்பில். டமீம் இக்பால் 80 ஓட்டங்களையும், சௌமியா சர்கார் 73 ஓட்டங்களையும், சகிப் ஹல் ஹசன் 61 ஓட்டங்களையும், முஷ்டபிகுர் ரஹீம் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் செனோன் கெப்ரியல் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சாய் ஹோப் தெரிவுசெய்யப்பட்டார்.
இப்போட்டியின் முடிவில் புள்ளி பட்டியலில். மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என இரண்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
பங்களாதேஷ் அணி ஒரு போட்டியில் விளையாடி, அதில் வெற்றிபெற்று இரண்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அயர்லாந்து அணி, ஒரு போட்டியில் விளையாடி, அதில் தோல்வியடைந்து புள்ளியெதுவும் பெறாத நிலையில், புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.
இந்த தொடரின் அடுத்தப் போட்டியில், அயர்லாந்து அணியும் பங்களாதேஷ் அணியும் நாளை டப்ளின் மைதானத்தில் மோதவுள்ளன.