உத்தர பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் திவாரி, தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாமென்ற கோணத்தில் அவரது மனைவியிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரோஹித் திவாரி, அண்மையில் திடீரென மரணடைந்துள்ளார். ஆனாலும் அவர் இயற்கை மரணமடையவில்லை எனவும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரோஹித் திவாரியின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (சனிக்கிழமை) விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ரோஹித் திவாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், இயற்கை மரணம் அல்லவென கூறப்பட்டுள்ளதுடன் தலையணையை முகத்தில் வைத்து அழுத்தியமையால் அவர் மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது கொலையாக இருக்கலாமென பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளமையால், இந்த சம்பம் தொடர்பான வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோஹித் திவாரி உயிரிழந்த வேளையில் அவரது வீட்டில் மனைவி அபூர்வா, அவரது உறவினர் சித்தார்த், வீட்டுப் பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆகவேதான் அபூர்வாவிடம் டெல்லி பொலிஸார் இன்று விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
ரோஹித் திவாரி உயிரிழந்த பின்னர் அவரது உடலில் சில காயங்கள் இருந்தமையால் பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.