உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான், பொதுமேடையில் நடிகை ஜெயப்பிரதா மீது பாலியல் ரீதியாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதற்காக பல்வேறு தரப்பினரால் கடும் கண்டனத்திற்கு உள்ளான அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் உ.பியின் ராம்பூரில் ஒன்பதா வது முறை எம்எல்ஏவாக இருப்பவர் ஆசம்கான்.
சமாஜ் வாதியின் நிறுவனர்களில் ஒருவரான இவர், இம்முறை மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் இருமுறை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட நடிகை ஜெயப்பிரதாவை பாஜக நிறுத்தி யுள்ளது. தனது அரசியல் ஆசானான அமர்சிங்குடன் சமாஜ்வாதியில் இருந்து ஆசம்கானால் வெளியேறியவர் ஜெயப்பிரதா.இவருக்கும் ஆசம்கானுக்கும் இடையே ராம்பூரில் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவுடன் ஆசம்கான் ராம்பூரில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் ஜெயப்பிரதா மீது பாலியல் ரீதியாக விமர்சனம் செய்தார். ஜெயப்பிரதா ஒரு ஆர்எஸ்எஸ் கொள்கை உடையவர் என்பதை குறிப்பிட வேண்டி ஆசம்கான் பயன்படுத்திய வார்த்தைகள் பெண்களையும் அவமானப்படுத்தும் வகையில் அமைந்து விட்டது.
இதற்காக ஆசம்கானுக்கு நோட்டீஸ் அனுப்பி தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. ஆசம்கானின் செயலுக்கு பாஜக தலைவர் அமித் ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மகாபாரதக் காவியத்தை ஒப்பிட்டு ட்வீட் செய்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், ‘சகோதரர் முலாயம்சிங் ஜி! உங்கள் கண்முன்னே ராம்பூரின் திரௌபதி துகிலுரியப்படுகிறார். இதை பார்த்து பீஷ்மரை போல் அமைதி காத்து தவறு செய்து விட வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த புகாரை ஆசம்கான் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “என் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவேன். அமைச்சராகவும் இருந்த எனக்கு என்ன பேசுவது என்பது நன்றாகத் தெரியும். ராம்பூரின் தெருக்களில் ஜெயப்பிரதாவை விரல் பிடித்து அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியதே நான்தான்” என்றார்.இது குறித்து பாதிக்கப்பட்டவரான ஜெயப்பிரதா கூறும்போது. ‘ஆசம்கானின் இந்த செயல்கள் எனக்கு புதிதல்ல. இதைப்போல் அவர் விமர்சித்ததை ஒரு பெண்ணாக என்னால் மீண்டும் விவரிக்க இயலாது. இவரை போட்டியிட அனுமதிக்கக் கூடாது? அவரது பேச்சுக்கு பயந்து நான் ராம்பூரை விட்டுப் போக மாட்டேன்’ என்றார்.
இதற்கிடையில் ஜெயப்பிரதாவை விமர்சனம் செய்ததாக ஆசம்கான் மீது 9 வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் பதிவாகி உள்ளன. ஆசம் கான் 72 மணி நேரத்துக்கு பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையமும் தடை விதித்துள்ளது. மேனகா காந்தி பிரச்சாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.